திமுக ஆட்சி தொடர மக்கள் விரும்பி வாக்களிப்பு: டி.ராஜா பேட்டி

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்பி வாக்களித்துள்ளனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கூறினார். சென்னையின் தி.நகரில் அமைந்துள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாகவது:

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் என்னுடைய மதிப்பீட்டின் அடிப்படையில், இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்ற விருப்பத்தோடு வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தை முன்னணி மாநிலமாக வைத்திருக்க இந்த ஆட்சியே தொடர வேண்டும் என்ற மனநிலையே வாக்காளர்களிடம் நிலவுகிறது. மேலும், தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்பதால், அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை உணர்ந்து, வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: