படகில் வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் மலை கிராமங்கள் பல உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக, படகுகளுக்கு கட்டணம் செலுத்தி, பேச்சிப்பாறை அணையை கடந்து குலசேகரம் போன்ற நகர் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

அதேபோல் ஒவ்வொரு தேர்தலுக்கும் பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு படகுகளில் வந்து வாக்களிப்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு வாக்காளர்கள் வசதிக்காக 3 படகுகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த படகுகளில் அணைக்கு மறுபக்கத்தில் உள்ள தோட்டமலை, தச்சமலை, மாறாமலை, தளப்பாறை, நடனம்பொற்றை, சின்னம் மூட்டுத்தேரி உள்ளிட்ட பல மலை கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் சென்று, அங்கிருந்து 1 கிலோ மீட்டர் நடந்தே சென்று பேச்சிப்பாறை உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர்.

Related Stories: