மின்னணு இயந்திரம் பழுது 45 நிமிடம் காத்திருந்த அமைச்சர், கலெக்டர்

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட தில்லைநகர் 7வது கிராஸில் உள்ள மக்கள் மன்றத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்க இருந்த நிலையில் அந்த வாக்குச்சாவடியில் இருந்த 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் பழுதானது. இதனால் வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வாக்களிக்க காலை 7.05 மணிக்கு வந்தார்.

இயந்திரம் பழுதால் அமைச்சர் நேரு வரிசையில் காத்திருந்தார். இதே போல் மக்களும் காத்திருந்தனர். பின்னர் 7.50 மணிக்கு பழுதான வாக்குப்பதிவு இயந்திரம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 7.50 மணிக்கு கே.என்.நேரு வாக்களித்துவிட்டு சென்றார். தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கலை கல்லூரியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் வாக்களிப்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் நேற்று காலை 7.15 மணிக்கு சென்றார். அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 7.45 மணிக்கு இயந்திரம் சரி செய்யப்பட்டது. இதனால் அரை மணி நேரம் காத்திருந்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தனது வாக்கை பதிவு செய்தார்.

Related Stories: