×

152 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் 92 சதவீதம் வாக்குப்பதிவு; பல இடங்களில் வன்முறை; பாஜ வேட்பாளருக்கு தர்மஅடி: அறிக்கை தர தேர்தல் கமிஷன் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 152 தொகுதிகளில் நேற்று நடந்த முதல்கட்ட தேர்தலில் 92 சதவீத வாக்குகள் பதிவாகின. பல இடங்களில் அடிதடி, வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவியது. 2 பாஜ வேட்பாளர்களுக்கு தர்ம அடி விழுந்தது. பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக கூறியிருக்கும் தேர்தல் ஆணையம், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது.

இதில், 152 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. 167 பெண்கள் உட்பட 1,478 வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வகையில், 16 மாவட்டங்களில் நேற்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே நடைபெறும் கடும் போட்டி நிறைந்த இத்தேர்தலில், முதல் கட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில் 18.76 சதவீதமாகவும், காலை 11 மணி அளவில் 41.11 சதவீதமாகவும், பிற்பகல் 1 மணி அளவில் 62.18 சதவீதமாகவும் வாக்குப்பதிவு படிப்படியாக உயர்ந்தது. பதற்றம் பிறைந்த முர்ஷிதாபாத், ஜங்கல்மஹால் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனால் மாலை 5 மணி நிலவரப்படி 89.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 3.60 கோடி வாக்காளர்களில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.

இது மேற்கு வங்க தேர்தலில் பதிவாகும் வரலாறு காணாத வாக்கு சதவீதம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எஸ்ஐஆர் மூலம் 91 லட்சம் (12 சதவீதம்) வாக்குகள் நீக்கப்பட்டன. இதனால் இம்முறை வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021ல் 8 கட்டமாக நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் 82.30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

எஸ்ஐஆர் மூலம் தகுதியான பல வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய நிலையில், வாக்குப்பதிவிலும் அதன் தாக்கம் இருந்தது. பல தொகுதிகளில் வன்முறை, அடிதடி சம்பவங்கள் நடந்தன. பிர்பூமின் கொய்ராசோலில், திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பாஜவுக்கு பதிவானதாக வாக்காளர்கள் குற்றம்சாட்டியதால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அப்போது உள்ளூர் மக்களுக்கும் வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. தக்ஷின் தினாஜ்பூரின் குமார்கஞ்சில் பாஜ வேட்பாளர் சுவேந்து சர்க்கார் தனது தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ரகளை செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்றார்.

அப்போது அவரை சூழ்ந்த கும்பல் விரட்டி விரட்டி தர்ம அடி கொடுத்தது. ஒரே ஒரு பாதுகாப்பு படை வீரர் துணையுடன் காலி மைதானத்தில் தலைதெறிக்க ஓடிய சுவேந்து சர்க்கார் அங்கிருந்து தப்பினார். பீர்பூமின் லாப்பூர் மற்றும் மால்டாவின் சஞ்சல் ஆகிய பகுதிகளில், பாஜ வாக்குச்சாவடி முகவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அசன்சோல் தக்ஷினில் பாஜ எம்எல்ஏ அக்னிமித்ரா பாலின் கார் மீது கற்கள் வீசப்பட்டதில் கண்ணாடி உடைந்தது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ், பாஜ அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியது. நவேடாவில் ஏஜேயுபி தலைவர் ஹுமாயுன் கபீரின் பாதுகாப்புக்கு சென்ற வாகனங்கள் மீதும் கல் வீச்சு நடந்ததால் அங்கிருந்த ஏஜேயுபி, திரிணாமுல் காங்கிரசார் இடையே மோதல் ஏற்பட்டது. முராராயில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் மோதிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். இதனால் பல இடங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸால் பாதுகாக்கப்படும் குற்றவாளிகள் வாக்காளர்களை அச்சுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். தேர்தல் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்த மத்திய அமைப்புகளையும் படைகளையும் பாஜ பயன்படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதுதவிர வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு தொடர்பாக 700க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

இருப்பினும் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாகவும், வன்முறை தொடர்பாக அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 142 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் வரும் 29ம் தேதி நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தல் நடந்த 152 தொகுதிகளில் 2021ல், திரிணாமுல் காங்கிரஸ் 93 தொகுதிகளையும், பாஜ 59 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது.

* வாக்குப்பதிவு அதிகரிப்பு ஆளுங்கட்சிக்கே சாதகம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் போ பஜார் பகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘‘மக்களின் மனநிலையை புரிந்துகொண்ட வரையில், இன்று பதிவான வாக்குகளை பார்க்கும் போது, நாங்கள் ஏற்கனவே வெற்றி பெறும் நிலையில் இருக்கிறோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து டெல்லியை வெல்வேன்’’ என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குனால் கோஷ் அளித்த பேட்டியில், ‘‘வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இது பாஜவை மக்கள் திட்டவட்டமாக நிராகரித்ததையே காட்டுகிறது. முதல் கட்ட தேர்தலில் குறைந்த பட்சம் 125 முதல் 134 இடங்கள் வரையிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெல்லும்’’ என்றார்.

Tags : West Bengal ,BJP ,Election Commission ,Kolkata ,
× RELATED கேரளத்தில் 12 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை