பெரம்பலூர், ஏப்.23: பெரம்பலூர் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று (23ஆம் தேதி) முதல் வாக்கு எண்ணும் நாளான மே4 ஆம் தேதி வரை ஆளில்லாத விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (23ம் தேதி) நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, பதிவான வாக்குகளுடன் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சட்டப் பூர்வமான ஆவணங்கள் அனைத்தும் பெரம்பலூர் நகருக்கான புறவழிச் சாலையில், கோனேரிபாளையம் பிரிவுரோடு அருகே உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.
எனவே இன்று (23ஆம்தேதி) முதல் வாக்கு எண்ணும் நாளான வருகிற மே 4ம் தேதி வரை தேர்தலின் போது பதிவான வாக்குகளுடன் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகமானது, 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக (Red Zone Area) அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை ஆளில்லாத விமானங்கள் (Remotely Piloted Aircraft System- RPAS) மற்றும் ட்ரோன்கள் (Drone) பறக்க தடைவிதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
