அரியலூர், ஏப். 23: அரியலூர் மாவட்டத்தில் உள்ள 650 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணியில் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இரு தொகுதிகளிலும் 2,60,565 ஆண் வாக்காளர்களும், 2,65,799 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து 5,26,392 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்காக இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் 650 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 42 வாக்கு சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் 3120 அலுவலர்களும், 50 தேர்தல் நுண் பார்வையாளர்களும் தேர்தல் பணிகள் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற பாதுகாப்பு பணிகளும் அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி தலைமையில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் 837, இரண்டு கம்பெனி அலுவலக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 158 பேரும், முன்னாள் ராணுவத்தினர்கள் மற்றும் முன்னாள் காவலர்கள் 323 பேரும், ஊர்க்காவல் படையினர் 230 பேரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரியலூர் சட்டமன்றத்தில் உள்ள 330 வாக்கு சாவடிகளுக்கு ஜெயங்கொண்டத்தில் உள்ள 320 வாக்குச்சாவடிகளுக்கும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் நேற்று நடைபெற்றது.
வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் மற்றும் வேட்பாளர் பட்டியல் அழியாத மை உள்ளிட்ட தளவாடப் பொருள்களும் பாதுகாக்கப்பட்ட வேன்களில் துப்பாக்கி ஏந்திய போலீசருடன் பாதுகாப்பாக தேர்தல் மண்டல அலுவலர்கள் கொண்டு செல்கின்றனர். இந்த தேர்தலில் முதல் முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
