தேர்தலை மனதில் வைத்து தமிழக பட்ஜெட் வெற்று அறிவிப்பு பல்வேறு தரப்பினரும் கருத்து

காரைக்குடி, பிப்.24:  தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பாகவே இந்த பட்ஜெட் உள்ளது. நலிவடைந்த நிலையில் உள்ள சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு என திட்டங்கள் எதுவும் இல்லை.  காவேரி குண்டாறு இணைப்பு, 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை என அனைத்து துறைகளுக்கும் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளனர். ஆனால் இதற்கான நிதி ஆதாரம் இல்லை என புகார் எழுந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படுவர்கள் மக்கள் தான். உலக முதலீட்டர்கள் மாநாடு 2 முறை நடத்தப்பட்டது. இதில் வட மாவட்டத்திற்கு 100க்கு மேற்பட்ட நிறுவனங்கள் துவங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்தங்கிய சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியில் தொழிற்சாலை அமைப்பு குறித்து அறிவிப்பு இல்லை. சிவகங்கை மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்கு என அறிவிப்பு இல்லை. காரைக்குடி நகராட்சி மாநகராட்சி அறிவிப்பு, செட்டிநாடு பகுதியில் வேளாண் கல்லூரி, காரைக்குடியில் மகளிர் கலைக்கல்லூரி போன்ற எந்த அறிவிப்பும் இல்லை. படித்து வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு என அறிவிப்பு இல்லை.

இதுபற்றி முன்னாள் அமைச்சர் தென்னவன் கூறுகையில், ‘‘தமிழக அரசின் பட்ஜெட் வெற்று அறிவிப்பு. தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு கடன் 12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி என கூறி விட்டு, 5,000 கோடி தான் ஒதுக்கி உள்ளனர். மீதம் உள்ள 7,000 கோடி அடுத்து வரும் அரசுதான் ஒதுக்க வேண்டும். திமுக ஆட்சியின்போது 1 லட்சம் கோடியாக இருந்த கடன், தற்போது 5.7 லட்சம் கோடி கடனாக உள்ளது. இதில் இந்த ஆண்டு மட்டும் 1.7 லட்சம் கோடி கடன். கடன் வாங்கி டென்டர் விட்டு கொள்ளை அடிக்கின்றனர். ஒவ்வொருவர் தலையிலும் ரூ.63 ஆயிரம் கடன் உள்ளது. வருவாய் பற்றாக்குறை நிதி பற்றாக்குறை அதிகம். நிதி ஒதுக்காமல் திட்டங்களை அறிவித்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சியை அதிமுக அரசு பின்னோக்கி கொண்டு சென்று விட்டது’’ என்றார்.தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி, ‘‘மக்கள் நலத்திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி நிதிகள் ஒதுக்கீடு அறிவிப்புகள் கேட்பதற்கு இனிப்பாகவும், அழகாகவும் தெரிகிறது. ஆனால் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலைதான் உள்ளது. காரைக்குடியை மாநகராட்சி அறிவிப்பு இல்லை. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளர்ச்சிப்பணிகள், சிவில் வழக்கு சார்ப்பு நீதிமன்றம் அமைப்பது போன்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமே’’ என்றார்.

Related Stories: