காம்ஜோங்: மணிப்பூர் மாநிலத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். மணிப்பூர் மாநிலத்தின் காம்ஜோங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து 62 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகி இருந்தது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த அதிர்வு கடுமையாக உணரப்பட்டதால், அதிகாலையில் தூக்கத்தில் இருந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தினால், கட்டிடங்களுக்குப் பெரிய பாதிப்போ அல்லது உயிரிழப்புகளோ நடந்ததாக இதுவரை தகவல் இல்லை. இருப்பினும், தொடர் நில அதிர்வுகள் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.
