×

திருச்சூர் பூரம் திருவிழாவுக்காக பட்டாசு தயாரித்த போது விபத்து 13 பேர் உடல் சிதறி பரிதாப பலி: 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் வருடம்தோறும் நடைபெறும் பூரம் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவை முன்னிட்டு 30க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்கும் குடைமாற்றம் நிகழ்ச்சி மற்றும் கண்கவர் வாணவேடிக்கையை பார்த்து ரசிப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும். இவ்வருட பூரம் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வழக்கமாக கேரளாவில் பெரும்பாலான கோயில் திருவிழாக்களில் ஒரு நாள் மட்டும் தான் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் திருச்சூர் பூரம் திருவிழாவில் 2 நாட்கள் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படும். ஒரு நாள் மாதிரி வாணவேடிக்கையும், 2 நாள் கழித்து முக்கிய வாணவேடிக்கையும் நடைபெறும்.

இவ்வருட மாதிரி வாணவேடிக்கை நிகழ்ச்சி வரும் 24ம் தேதி இரவிலும், 27ம் தேதி அதிகாலையில் முக்கிய வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக பட்டாசுகளை தயாரிக்கும் பணிகள் அருகிலுள்ள முண்டத்திக்கோடு என்ற இடத்தில் ஆள் நடமாட்டமில்லாத வயல்வெளியில் 5 தற்காலிக குடிசையில் இரவு பகலாக நடைபெற்று வந்தது. நேற்று இந்தப் பணியில் 45க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மாலை 3.30 மணியளவில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறத்தொடங்கின. கண்ணிமைக்கும் நேரத்தில் 5 குடிசைகளிலும் இருந்த வெடிபொருட்களில் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் உடல்கள் சின்னாபின்னமானது.

பட்டாசு வெடிக்கும் சத்தம் பல கிமீ தொலைவுக்கு கேட்டது. அப்பகுதியில் இருந்த பல வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதுகுறித்து அறிந்ததும் திருச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோருக்கு திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெடி விபத்தை தொடர்ந்து இவ்வருட வாணவேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.

Tags : Thrissur Pooram firecracker ,Thiruvananthapuram ,Pooram festival ,Vadakkannathar temple ,Thrissur, Kerala ,
× RELATED மேற்குவங்கத்தில் இதுவரை இல்லாத...