வேடசந்தூரில் பறக்கும் படை சோதனை; ரூ.1.80 லட்சம் பறிமுதல்

வேடசந்தூர், ஏப். 20: வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரஸ்நேவ் தலைமையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண் மற்றும் ஆண் ஆகியோர் அதிகாரிகளை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து சோதனை இட்டனர்.

அப்போது அவர்களில் ஆணிடம் ஒரு லட்சம் ரூபாயும், பெண்ணிடம் 80 ஆயிரம் ரூபாயும் இருப்பது தெரியவந்தது.  விசாரணையில் தம்மனம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (44) மற்றும் பெருமாள் மனைவி பிரியா (36) ஆகியோர் என்பது உறுதியானது. இவர்கள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த தொகை வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Related Stories: