பருத்தி பயிருக்கு நுண்ணூட்ட உரங்கள் இடுவதால் பயிரின் மகசூலை அதிகரிக்கலாம்

குன்னம், ஏப். 20: பருத்தி பயிருக்கு நுண்ணூட்ட உரங்கள் இடுவதால் மகசூலை அதிகரிக்கலாம் என்று வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண் துறையினர் கூறும்போது, பருத்தி பயிருக்கு நுண்ணூட்ட உரங்கள் இடுவதால் பயிரின் ஆரோக்கியம் மேம்பட்டு மகசூல் அதிகரிக்கிறது. இது இலை சிவப்பாகுதல், சப்பைக் கொட்டுதல் போன்ற குறைபாடுகளைத் தடுக்கிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிந்துரைப்படி, எக்டருக்கு 12.5 கிகி நுண்ணூட்டக் கலவையை அடியுரமாக 50 கிகி மணலுடன் கலந்து இட வேண்டும்.

கலப்பின ரகங்களுக்கு 15 கிகி அளிக்கலாம்.இது தொழுவுரத்துடன் பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஊட்டமேற்றி பயன்படுத்தினால் சிறந்தது. இலை வழியாக நுண்ணூட்டக் கலவை தெளிப்பு செய்வதன் மூலம் காய் உருவாகும் பருவத்தில் சிவப்பாகுதலை குறைக்கிறது. போரான் குறைபாட்டால் வரும் சிகப்பு இலை நோய், சப்பைக் கொட்டுதல் தடுக்கப்படுகிறது.

செடி வளர்ச்சி சீராகி, காய் உருவாக்கம் அதிகரித்து விதை மகசூல் பத்திலிருந்து 20% வரை உயர்கிறது.மண்ணின் நுண்ணுயிர் பெருக்கம் ஏற்பட்டு இயற்கை நோய் எதிர்ப்பு மேம்படுகிறது. இதன் மூலம் அதிகப்படியான பேரூட்டச்சத்துகளைத் தவிர்த்து செலவை குறைத்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Stories: