பெரம்பூர், ஏப்.20: வியாசர்பாடி பி.வி. காலனி 15வது தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார் (30), இவரது நண்பர் வியாசர்பாடி அன்னை இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் பரத்ராஜ் (25). கடந்த 17ம் தேதி இரவு 8 மணி அளவில் பரத்ராஜ் தனது நண்பர் நந்தகுமாரிடம் செல்போன் கொஞ்சம் வேண்டும் எனது மனைவியிடம் பேசிவிட்டு தருகிறேன் என கேட்டுள்ளார். நந்தகுமாரும் அவரிடம் செல்போனை கொடுத்துள்ளார்.
சிறிது தூரம் பேசிக்கொண்டே சென்ற பரத்ராஜ் செல்போனை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். அதன் பிறகு நந்தகுமார் வேறு ஒரு போனில் இருந்து பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் பரத் ராஜ் எம்கேபி நகர் மேம்பாலம் வழியாக செல்லும் போது நந்தகுமார் அவரை பார்த்து செல்போன் எங்கே எ ன கேட்டுள்ளார். அப்போது திடீரென ஓட்டம் பிடித்த பரத்ராஜ் அருகில் உள்ள கூவத்தில் குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் மற்றும் பொதுமக்கள் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு வீரர்கள் வந்து பரத் ராஜை மீட்டனர். அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு பரத்ராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். நந்தகுமாரிடமிருந்து வாங்கிய செல்போனை டாஸ்மாக் கடைக்கு எடுத்துச் சென்று 900 ரூபாய்க்கு விற்றுவிட்டு, பரத்ராஜ் மது வாங்கி குடித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிறகு நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் பரத்ராஜ் மீது எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பரத்ராஜ் மீது 8 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
