சென்னை, ஏப்.20: டிஜிபி அலுவலகம் அருகே குறுக்கே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க முயன்ற போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 ஆட்டோ மற்றும் கார் மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாவித் (25). இவர் நேற்று மதியம் சொகுசு காரில் காமராஜர் சாலை வழியாக மெரினா கடற்கரை நோக்கி சென்றார். கார், டிஜிபி அலுவலகம் அருகே வரும் போது, திடீரென குறுக்கே ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோ மீது மோதாமல் இருக்க முகமது ஜாவித் தனது காரை இடது பக்கம் திருப்பினார். அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் 2 ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சொகுசு கார் சற்று வேகமாக வந்ததால் காரில் இருந்து பாதுகாப்பு சாதனங்கள் உதவியுடன் காரை ஓட்டி வந்த முகமது ஜாவித் காயங்களின்றி உயிர்தப்பினார். அதேபோல் இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. வாகனங்கள் மட்டுமே கடுமையாக சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சொகுசு காரை இயக்கிய முகமது ஜாவித் மற்றும் சாலையின் குறுக்கே வந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் டிஜிபி அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
