ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தனது அஇபுதமமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான இடைப்பாடியில் போட்டியிடும் சுரேஷை ஆதரித்து நேற்று நடந்த பிரசார கூட்டங்களில் பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒருவரை நான், நம்பி முதல்வர் ஆக்கினேன். ஆனால், அவர் என் முதுகில் குத்தி விட்டார். அவரை முதல்வராக்கியது குற்றமா? அவரது பெயரைக்கூட சொல்வதற்கு எனக்கு மனமில்லை. கட்சியை விட்டே என்னை தூக்கி எறிந்தார்.
எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் சரியாக செயல்படவில்லை. பெயருக்கு முன்னால் ஊரின் பெயரை அவர் போடுவது, தொகுதி மக்களுக்கு அவமானமாக உள்ளது. எனவே, ஊரின் பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது. நன்றி கெட்டவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது. இதுபோன்ற துரோகிகளிடம் இருந்து பொதுமக்களையும், தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டியது எனது பொறுப்பு. அதிமுக ேதர்தல் அறிக்கையில் பிரிட்ஜ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தியமில்லாததை சொல்லி, மக்களை ஏமாற்றுவதையே வேலையாக வைத்துள்ளார் அவர். கல்யாணத்தில் சீப்பை எடுத்து ஒளித்து வைப்பது போல், இடைப்பாடியில் தவெக வேட்பாளரை போட்டியிட விடாமல் தடுத்துள்ளனர். இதனை அறிந்து, கடைசி நேரத்தில் என்னுடைய வேட்பாளரை போட்டியிட வைத்துள்ளேன். கோபியில் நடந்த கூட்டத்தில், எனக்கு நன்றி இல்லை என்று செங்கோட்டையன் பேசியுள்ளார். நன்றி பற்றி அவர் பேசலாமா? இவ்வாறு சசிகலா பேசினார்.
