கிருஷ்ணகிரி, ஏப்.18: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவிற்கு உட்பட்ட நேரலக்கோட்டை காப்புக்காடு, நந்திபெண்டா காப்புக்காடு மற்றும் தொகரப்பள்ளி காப்புக்காடு உள்பட 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான வனப்பகுதிகள் உள்ளன. இதில், பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது, வனப்பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. விலங்குகளுக்கு போதிய குடிநீரும், உணவும் கிடைப்பதில்லை. இதனால், மான்கள் வனப்பகுதியை விட்டு, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், நேற்று பர்கூர் அடுத்த பொன்னத்தூர் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து ,குடிநீர் தேடி வந்த பெண் புள்ளிமான் ஒன்று, தனியார் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது, அங்கு புதர்மண்டி கிடந்த 80 அடி கிணற்றில் தவறி விழுந்தது. அந்த கிணற்றில் 5 அடி அளவிற்கே தண்ணீர் இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் மான் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டு, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் சேட்டு மற்றும் வீரர்கள் பழனி, அன்புமணி, விவேகானந்தன், கோகுல், பிரதாப் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள வனத்தில் பாதுகாப்பாக விட்டனர்.
80 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
- கிருஷ்ணகிரி
- நெரலக்கோட்டை வனக் காப்பகம்
- நந்திபெண்டா வனக் காப்பகம்
- தோகரபள்ளி வனக் காப்பகம்
- பர்கூர் தாலுகா
- கிருஷ்ணகிரி மாவட்டம்
