வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு நாடகம்’

ஓசூர், ஏப்.12: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். ஓசூர் பஸ் நிலையம், ரயில் நிலையம், உழவர் சந்தை மற்றும் ராமநாயக்கன் பூங்கா ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. தேர்தல் நடைபெறும் நாளை சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதை விடுமுறை நாளாக கருதாமல், கடமை நாளாக கருதி அனைவரும் வாக்களிக்குமாறு இந்த நாடகத்தில் எடுத்துரைக்கப்பட்டது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு தேர்தல் ஆணையம் வாக்களிப்பதற்கு வசதியாக பல்வேறு சலுகைகள் அளித்துள்ளதாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த சாந்திகணேஷ், முத்துமணி கண்ணன், ஸ்வேதா, ஜோதிபவார், சாரதி மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு, ஓசூர் வருவாய் ஆய்வாளர் சென்னம்மாள், மாநகராட்சி உதவி பொறியாளர் கோவிந்தராசு ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: