சென்னையில் இன்று தூறல் மழை பெய்ய வாய்ப்பு; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் இன்று தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து, பகல் நேரங்களில் கடுமையான வெப்பக்காற்று வீசியது. இந்த திடீர் வெப்பநிலை உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தற்போது வடதமிழக கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 24ம் தேதி வரையிலான அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 25ம்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை அல்லது தூறல் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான புழுக்கம் தணிந்து, மாலையில் குளிர்ந்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: