×

மகளிருக்கு மாதம் ரூ.2000 உதவி தொகை; குடும்பத்துக்கு ஒருமுறை ரூ.10,000 நிதியுதவி ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்: பாஜ தேர்தல் அறிக்கையை ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்

சென்னை: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒருமுறை ரூ.10000 நிதியுதவி மற்றும் மகளிருக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்ற பாஜ தேர்தல் அறிக்கையை ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக பாஜவில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் தயாரித்த ேதர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

தேர்தல் அறிக்கையை, ‘புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026’ என்ற தலைப்பில் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். நிகழ்ச்சியில், ஒன்றிய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல், தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முன்னாள் பாஜ மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, நிர்வாகிகள் சரத்குமார், கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாஜ தேர்தல் அறிக்கை, தமிழகத்தின் சங்க கால ‘ஐந்திணை’ (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) வாழ்வியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும். ஆண்டுக்கு 3 விலையில்லா காஸ் சிலிண்டர்கள் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்க தடையற்ற ‘ஜீரோ-எப்ஐஆர்’ பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்சோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் ‘நிர்பயா’ நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.

பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, உற்பத்தி அலகுகளை அமைக்க ரூ.50 லட்சம் வரை வட்டி இல்லா கடன்கள் வழங்கப்படும். தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம். திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வோம். சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டின் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம். 10, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் செய்முறைப் பயிற்சிகளுடன் கூடிய பிரத்யேக வாராந்திரப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.

முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ரூ.15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும். மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்குத் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.தமிழக நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கோவில் மரபுகளைப் பாதுகாக்கும் வகையில், ‘திருக்கோயில் நித்ய பூஜை தொகுப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Tags : Union Minister ,J.P. Nadda ,BJP ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி...