×

சேலம் கோட்டை மைதானத்தில் இன்றிரவு பிரசார பொதுக்கூட்டம் முதல்வர் தலைமையில் பிரமாண்ட மகளிர் பேரணி: கமலஹாசன், பிரேமலதா பங்கேற்பு

சேலம்: சேலத்தில் இன்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் பிரமாண்ட மகளிர் பேரணியில் நடிகர் கமலஹாசன், பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி இன்று (15ம் தேதி) மாலை தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனை முடித்துக்கொண்டு சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

முன்னதாக, சேலம் அண்ணா பூங்காவில் இருந்து கோட்டை மைதானம் வரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட மகளிர் பேரணி நடக்கிறது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் எம்பி., தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கின்றனர். தேர்தல் பொதுக்கூட்டம் முடிந்தபின்னர், இன்றிரவு சேலத்தில் தங்கும் முதல்வர் நாளை மாலை நாமக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். சேலம் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர்.

Tags : Salem Fort Ground ,Chief Minister ,Kamal Haasan ,Premalatha ,Salem ,Premalatha Vijayakanth ,M.K. Stalin ,Tamil Nadu Assembly ,
× RELATED ஜனநாயக விரோதமான தொகுதி மறுவரையறை...