- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- வேலூர்
- ஸ்டாலின்
- Kandaneri
- திமுக
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
வேலூர்: தமிழ்நாட்டின் தன்மானத்துக்காக ஸ்டாலின் களத்தில் நிற்பான். நெருப்ேபாடு விளையாட வேண்டாம் என்று வேலூர் கந்தனேரியில் நடந்த பிரசார கூட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். வேலூர் அடுத்த கந்தனேரியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் வரவேற்றார்.
கூட்டத்தில், திமுக வேட்பாளர்கள் காட்பாடி அமைச்சர் துரைமுருகன், வேலூர் ப.கார்த்திேகயன், அணைக்கட்டு ஏ.பிநந்தகுமார், கே.வி.குப்பம் ராஜேஸ்வரி, குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரதாப் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: எப்படிப்பட்ட நிலையில நாம இந்தத் தேர்தலை சந்திச்சுட்டு இருக்கோம், இதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்போ பசியும் வறுமையும்தான் பெரும்பான்மையான மக்களோட வாழ்க்கை நிலையா இருந்துச்சு.
அந்த அவல நிலைய மாற்றணும்னு இந்திய அரசு கொண்டுவந்ததுதான் குடும்ப கட்டுப்பாடு திட்டம். ‘அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்’னு சொன்னாங்க. சொன்ன மாதிரியே தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களும் இன்னும் சில மாநிலங்களும் அளவோடு பெற்று வளமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட ஆரம்பிச்சிருக்கோம். ஆனால், இப்போது ஒன்றிய அரசு என்ன பண்ணப்போகுதுன்னா, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வளர்ச்சியை நோக்கி நடைபோட்டதுக்காகவே நம்மைத் தண்டிக்கப் பார்க்குறாங்க.
நடக்கப்போற நாடாளுமன்ற கூட்டத்தொடர்ல இதுக்கான சதித்திட்டத்தை சட்டமா நிறைவேத்தலாம்னு திட்டமிட்டிருக்காங்க. இன்று மதியம் கூட இது சம்பந்தமா பிரதமர் மோடிக்கு நான் எச்சரிக்கை விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டிருக்கேன். தமிழ்நாடு என்பதை வெறும் மாநிலமாகவோ, நிலப்பரப்பாகவோ மட்டும் பார்க்கக்கூடாது. 8 கோடி தமிழ் மக்களுடைய உணர்வும், உரிமைக்குரலும்தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டோட பொருள் வளத்தை நெரிக்க நினைக்கக்கூடிய அவங்களுக்கு நாம சும்மா இருக்கக் கூடாது.
நாம் எதிர்கொண்டிருக்கக்கூடிய ஆபத்து குறித்து ஒன்றிய பாஜ அரசு செஞ்சிருக்கக்கூடிய பாசிச நாசவேலைகள் குறித்துப் பேசினா, ‘படிப்பறிவு, அறிவர்கள்’னு சொல்லிக்கிறாங்களே… உதாரணமா பியூஷ் கோயல்… அந்த பியூஷ் கோயல் ரொம்ப திமிர்த்தனமா பேசுறார். நான் அவரைக் கேட்டுக்கொள்வதெல்லாம், ‘நாவை அடக்கிப் பேசுங்கள்’. நீங்கள் தமிழ்நாடு பாஜவுக்கு மட்டும்தான் இன்சார்ஜ். அதை மறந்துட்டு அத்துமீறி வாய்க்கொழுப்போடு பேசிக்கிட்டு இருக்கீங்க. இங்க மரியாதை கொடுத்தாதான் திரும்ப மரியாதை கிடைக்கும்.
பாஜக தமிழ்நாட்டை பற்றி தப்பா எடைபோட்டிருக்கு. பிரதமர் அவர்களே, உங்க முன்னாடி கையைக்கட்டிக்கிட்டு அடிமையா இருக்காங்களே சில பேர், அவங்களை வச்சுத் தமிழ்நாட்டை குறைச்சு எடைபோடாதீங்க. தமிழர்கள் அறிவானவர்கள், சுயமரியாதை கொண்டவர்கள். எங்க தன்மானத்து மேல கைய வச்சா டெல்லியில் இருக்கக்கூடிய ஆணவத்துக்கு நாங்க கொடுக்கிற பதிலடி கடுமையானதாக இருக்கும்.
தமிழ்நாட்டுக்காக, தமிழினத்துக்காக போராட இப்ப யார் இருக்கா? தந்தை பெரியார் இல்ல, பெருந்தலைவர் காமராஜர் இல்ல, பேரறிஞர் அண்ணா இல்ல, தலைவர் கலைஞர் இல்லன்னு நினைச்சீங்களா? அது பெரிய தப்பு. அவங்களுடைய முழு உருவமா இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கேன். அவங்களுடைய ஆற்றலெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ரூபத்துல என் கூட கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டோட தன்மானத்துக்காக, உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்துல நிப்பான், சண்டை செஞ்சுட்டே இருப்பான்.
பிரதமர் அவர்களே, தமிழ்நாடு தன்னுடைய இறுதி எச்சரிக்கையை கொடுத்தாச்சு. நெருப்போடு விளையாட வேண்டாம். இங்க சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழ்கிறீர்கள். நாட்டோட பிற பகுதிகள்ல சிறுபான்மை மக்கள் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கு, ஆபத்துகளுக்கு எதிர்கொண்டிருக்காங்கனு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும். ஆனா தமிழ்நாட்டில் ஒவ்வொரு சிறுபான்மையினரும் பாதுகாப்பாக இருக்கிறாங்கன்னா, திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டுல வலிமையாக இருக்கிற காரணத்தால்தான். தலைவர் கலைஞர் வழியில் இந்த ஸ்டாலின் அதை உறுதி செஞ்சிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
* பாஜ அரசு செஞ்சிருக்கக்கூடிய பாசிச நாசவேலைகள் குறித்துப் பேசினா, ‘படிப்பறிவு, அறிவர்கள்’னு சொல்லிக்கிறாங்களே… அந்த பியூஷ் கோயல் ரொம்ப திமிர்த்தனமா பேசுறார். நான் அவரைக் கேட்டுக்கொள்வதெல்லாம், ‘நாவை அடக்கிப் பேசுங்கள்’.
* நீங்கள் தமிழ்நாடு பாஜவுக்கு மட்டும்தான் இன்சார்ஜ். அதை மறந்துட்டு அத்துமீறி வாய்க்கொழுப்போடு பேசிக்கிட்டு இருக்கீங்க. இங்க மரியாதை கொடுத்தாதான் திரும்ப மரியாதை கிடைக்கும். பாஜக தமிழ்நாட்டை பற்றி தப்பா எடைபோட்டிருக்கு.
* சொந்த காசுலேயே சூனியம் வச்சுக்கும் மோடி
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி, ஜோலார்பேட்டை தொகுதி கவிதா தண்டபாணி, ஆம்பூர் தொகுதி வில்வநாதன், வாணியம்பாடி தொகுதி முஸ்லீம் லீக் வேட்பாளர் சையத் பாரூக் ஆகியோரை ஆதரித்து திருப்பத்தூர் அடுத்த மண்டலவாடியில் பிரசாரக்கூட்டம் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு வஞ்சனை பண்ற பிரதமர், தி.மு.க மிக மோசமான நிர்வாகம் செய்வதாக நேற்று சோஷியல் மீடியால போஸ்ட் போட்டிருக்கிறார், செய்தி போட்டிருக்கிறார்.
இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. தமிழ்நாட்டுக்கு வர அமைச்சர்கள் எல்லாரும் இப்படித்தான் எதாவது பேசிச் சொந்தக் காசுலேயே சூனியம் வச்சுக்கிறாங்க. சில நாட்களுக்கு முன்னாடிதான் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், இதே மாதிரி பேசுனதுக்கு, ஒன்றிய அரசினுடைய தரவுகள், ஆய்வறிக்கைகள், தரவரிசைப் பட்டியலை வெச்சு நான் பதிலடி கொடுத்தேன். தமிழ்நாடு எத்தனை துறைகள்ல முதலிடத்துல இருக்கு, எத்தனை பிரிவுல எந்த மாநிலமும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்துல இருக்கு அப்படின்னு நான் பேசியிருந்தேன்.
பிரதமர் மோடி அதையெல்லாம் பார்த்துட்டு, அதற்குப் பிறகு பேசட்டும். குறைந்தபட்சம் பட்ஜெட்டுக்கு முன்ன ஒன்றிய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை, அதையாவது எடுத்துப் புரட்டிப் பாருங்க பிரதமர் அவர்களே. பிரதமர் அவர்களே, உங்க அறிக்கையும் பார்க்காம, ஐநா போன்ற உலக அமைப்புகள் தமிழ்நாட்டுக்கு தரக்கூடிய விருதுகளை பார்க்காம, சும்மா தேர்தலுக்காக ஒரு மாநிலத்துக்கு எதிரா எதையாவது பேசிட்டே இருக்கக் கூடாது.
பாஜகவைச் சேர்ந்த மோடி அப்படிப் பேசினா நாங்க கண்டுக்க மாட்டோம். ஆனா நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கக்கூடிய, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பிரதமர் இப்படிப் பேசக்கூடாது. அது நீங்க வகிக்கிற பதவிக்கு அழகல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
* ‘ஓநாய் எதுக்கு அழுமுன்னு தெரியாதா? பச்சோந்திக்கே டப் கொடுக்கும் பழனிசாமி’
‘‘குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாங்க. பீதியைக் கிளப்பி நம்ம கூடவே வாழக்கூடிய இஸ்லாமிய சொந்தங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது நாமதான் துணை நிற்கணும்னு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் கிட்ட கையெழுத்து வாங்கி, கையெழுத்து இயக்கம் நடத்தி பாதுகாப்பு தந்தது யாரு? திமுக. இதை கண்டிச்சு இந்த ஸ்டாலின் தலைமையில மாபெரும் ஊர்வலம் போனோம்.
அதுக்காக என் மேலேயும் என் கூட வந்த 8000 பேர் மேலேயும் எப்ஐஆர் போட்டாங்க. போட்டது யாரு? பச்சோந்திக்கே டப் கொடுத்து கலர் மாற்றுகிறாரே, அந்த பழனிசாமிதான். அது மட்டுமா? பழனிசாமி அதிமுக என்னவெல்லாம் செய்தது? சிஏஏ சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது. மாநிலங்களவையில அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது. ஆதரித்து வாக்களித்தது மட்டும் இல்ல, இந்த சட்டத்தால யார் பாதிக்கப்பட்டாங்கன்னு கேள்வி கேட்டு கொச்சைத்தனமாகக் கேள்வி கேட்டார் பழனிசாமி.
இவருடைய துரோகத்திற்கு சிறுபான்மை மக்கள் பதிலளிக்க தொடங்கியதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை பிரிந்த மாதிரி ஒரு கபட நாடகம் போட்டார். அதோடு ‘கூட்டணி தர்மத்துக்காக இந்த சட்டங்களை ஆதரிச்சோம்’ என்று கதை சொன்னார். ஓநாய் எதுக்கு அழுமுன்னு எல்லாருக்கும் தெரியும்தானே? அதனால மக்கள் என்ன பண்ணாங்க? பழனிசாமியோட நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்க முடியாதுன்னு ‘பத்து தோல்வி பழனிசாமி’ன்னு ஒரு பட்டத்தை கொடுத்தாங்க.
இதுல இருந்தாவது பழனிசாமி பாடத்தைக் கத்துக்கிட்டாரா? மறுபடியும் பாஜகவை தோள்ல சுமந்துக்கிட்டு வராரு. அண்மையில நாகூர்ல போய் பேசின பழனிசாமி இன்னொரு அரிய முத்தை உதிர்த்திருக்கிறார். ‘எங்களுக்குக் கூட்டணி வேற, கொள்கை வேற’ன்னு சொல்லியிருக்கிறார். பழனிசாமி அவர்களே, அப்படி என்னதான் உங்ககிட்ட கொள்கை இருக்கு? கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க கேட்போம். காலை பிடி, காலை வாரி விடு, முதுகுல சவாரி செஞ்சு முதுகிலேயே குத்து – இதானே உங்க கொள்கை?
கட்சியோட பேர்ல இருக்கிற திராவிடம்னா என்னன்னு கூட தெரியாதுன்னு சொன்னவர்தானே நீங்க? உங்களுக்கு திராவிடமும் தெரியாது, அண்ணாவும் தெரியாது, மண்ணும் தெரியாது, மக்களும் தெரியாது. அதனாலதான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பழனிசாமியை அரசியல் அவமானமா பார்த்துகிட்டு இருக்கு. அப்படிப்பட்ட பழனிசாமியை முகமூடியா பயன்படுத்திக்கிட்டு, டபுள் இன்ஜின் பேர்ல, என்டிஏ ஆட்சி என்ற பேர்ல தமிழ்நாட்டுக்குள்ள நுழைஞ்சிடலாம்னு பாஜக திட்டம் போடுது.
அதிமுக வெற்றி பெற்றால் அது என்டிஏ ஆட்சியாத்தான் இருக்கும்னு வெளிப்படையாவே பேச ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா தமிழ்நாட்டு மக்கள் கிட்ட மோடி மஸ்தான் வேலையும் எடுபடாது, அடிமை சாமியோட அடகு வைக்கிற வேலையும் நடக்காது. ஏன்னா தமிழ் மக்களுக்குள் இருக்கிறது ‘அகர முதல’ தொட்டு தாடிக்காரன்’ பிளட். தமிழ்நாட்டில் இருக்கிறது அறிஞர் அண்ணா பிளட், தலைவர் கலைஞர் பிளட்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
