×

தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி குன்னூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

குன்னூர்: தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், குன்னூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி பகுதியில் சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமி பவ்யா தண்ணீரு, வெலிங்டன் ஸ்டாப் காலேஜ் நினைவு தூண் முன்பு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி வெலிங்டன் படகு ஏரி வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சென்று நிறைவடைந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 23ம் தேதி இளைஞர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே சைக்கிள் பேரணியின் முக்கிய நோக்கமாகும். மேலும் கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக இருந்த பகுதிகளில் தற்போது விளையாட்டு போட்டிகள், ரங்கோலி போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் உறுதிமொழி ஏற்பு போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியில் லெப்டினன்ட் கர்னல் ஷஹ்ரியார் ஹைதர், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் அபிலாஷா கௌர், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, ஆவின் பொது மேலாளர் ராஜேஷ் குமார் மற்றும் தேசிய சைக்கிள் போட்டி வெற்றியாளர் ஸ்ரீநாத் லட்சுமிகாந்த் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Gunnar ,Tamil Nadu Assembly General Election ,Gunnar Wellington Military College ,Nilgiri District ,
× RELATED நடிகர் மன்சூர் அலிகான் ஆஸ்பத்திரியில் அட்மிட்