×

தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தொகுதி மறுசீரமைப்புக்கும் எதிராக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்யும்: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை : சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் பா.ஜ.வுக்கும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கும் எதிராக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்ய முடியும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐந்து மாநிலங்களில் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் தேர்தல்களுக்கிடையே மோடி அரசு, அவசர அவசரமாக வருகின்ற ஏப்ரல் 16 முதல் 18ம் தேதி வரை நாடாளுமன்றத்தை கூட்டி தொகுதி மறுசீரமைப்பு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இது குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு 2026ம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. ஒன்றிய பா.ஜ. அரசின் மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களுக்கு எதிரானதாகும். தற்போதுள்ள மொத்தம் 543 மக்களவை தொகுதிகளில் தென் மாநிலங்களிலுள்ள 130 இடங்கள் 103 இடங்களாக குறைந்து விடும். இதன்மூலம் மக்களவையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.74 சதவிகிதத்திலிருந்து 18.97 சதவிகிதமாக குறைந்துவிடும்.

தமிழ்நாட்டைப் போல, ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசத்தில், இப்போதுள்ள 42 இடங்கள் 34 இடங்களாக குறைந்துவிடும். ஆனால், அதற்கு மாறாக உத்தரபிரதேச மாநிலம் தற்போதுள்ள 80 மக்களவை இடங்களிலிருந்து 91 இடங்களாக உயர்ந்து விடும். அதேபோல, பீகார் 40ல் இருந்து 50 ஆகவும், மத்தியபிரதேசம் 29ல் இருந்து 33 ஆகவும், ராஜஸ்தான் 26ல் இருந்து 31 என உயரக்கூடிய நிலை ஏற்படும். இந்தி பேசுகிற மாநிலங்களில் 63 இடங்கள் உயர்ந்து 143 இடங்களாக அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

மொத்தமுள்ள 26 மாநிலங்களில், 10 இந்தி பேசும் மாநிலங்களில் தற்போது பெற்ற 80 சதவிகித வெற்றியை பெற்றால் தற்போதுள்ள 848 இடங்களில் 455 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கக் கூடிய நிலை ஏற்படும். ஒன்றிய பா.ஜ. அரசு திட்டமிட்டுள்ளபடி தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றால், இந்தி பேசும் மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களவை தொகுதிகளையும், இந்தி பேசாத மாநிலங்கள் குறிப்பாக, தென்னக மாநிலங்கள் மக்களவையில் பிரதிநிதித்துவம் கடுமையாக குறையக் கூடிய மிகப்பெரிய பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இன்றைய மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகளுக்கு ஓரளவு எண்ணிக்கை இருப்பதால் பா.ஜ. அரசின் பாசிச சர்வாதிகார நடவடிக்கைகளை எதிர்கட்சிகளால் எதிர்த்து குரல் கொடுக்க ஓரளவு வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த வாய்ப்பு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் இந்தி பேசாத மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒரே தேர்தல், ஒரே வாக்கு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே நாடு – ஒரே கலாச்சாரம் என ஆர்.எஸ்.எஸ்.,

பா.ஜ.வின் படையெடுப்புகளால் இந்தி பேசாத மாநிலங்கள் குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மேலும் பாதிக்கப்பட்டு இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள். எனவே, நரேந்திர மோடி அரசின் வகுப்புவாத, ஆர்.எஸ்.எஸ்., பாஜவின் சதித் திட்டத்தை முறியடிக்க தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும்.

அந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு இன்னும் 10 நாட்களில் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம் பாஜவுக்கும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கும் எதிராக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்ய முடியும். இதுவொரு தமிழ் மக்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்ட வாழ்வாதார பிரச்னையாகும். இதனுடைய தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டு மக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Secular Progressive Alliance ,Selvapperundhagai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,BJP ,
× RELATED தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி...