×

பெண் வேட்பாளரின் தாயார் குறித்து சர்ச்சை கருத்து: அசாம் பாஜக முதல்வருக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்

கவுகாத்தி: அசாம் பெண் வேட்பாளரின் தாயார் குறித்து சர்ச்சை கருத்து கூறிய அம்மாநில பாஜக முதல்வருக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அசாமில் கடந்த 9ம் தேதியன்று 126 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதியன்று நடைபெற உள்ளது. கவுகாத்தி மத்திய தொகுதியில் அசாம் ஜாதிய பரிஷத் கட்சி சார்பில் குன்கி சவுத்ரி போட்டியிடுகிறார். இவரது தாயார் சுஜாதா குருங் சவுத்ரி, அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் தற்போது ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில், ‘தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் என்னை பற்றி அவதூறான மற்றும் தவறான தகவல்களைப் பரப்பினார். நான் அரசியலில் எந்தப் பொறுப்பிலும் இல்லை; எனது மகள் தேர்தலில் போட்டியிடுவதால் பொதுவெளியில் தேவையின்றி இழுக்கப்பட்டுள்ளேன். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் சமூக வலைதள பதிவுகள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், நான் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், தேசவிரோத நபர்களுக்குத் துணையாக இருப்பதாகவும், பொதுவெளியில் மாட்டு இறைச்சி சாப்பிடுவதாகவும் முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.

அவர் காட்டிய புகைப்படம் அமெரிக்காவின் டென்வர் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் எடுக்கப்பட்டது. அதில் நான் கையில் வைத்திருப்பது ஒரு தலையணை போன்ற கலைப்பொருள் மட்டுமே, அது உணவு அல்ல. இது தொடர்பாக அந்தத் தேவாலய நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது. முதல்வரின் இந்தப் பேச்சால் எனது மைனர் மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

Tags : Assam ,BJP ,Chief Minister ,National Commission for Women ,Guwahati ,
× RELATED உத்தரபிரதேசத்தில் கல்வீச்சு, தீ...