×

நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கு: ஐ-பேக் இயக்குனரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி; விடிய விடிய நீதிபதி வீட்டில் நடந்த பரபரப்பு

புதுடெல்லி: ஐ-பேக் அரசியல் ஆலோசனை நிறுவனத்தின் இணை நிறுவனரும், இயக்குநருமான வினேஷ் சந்தல், நிலக்கரி ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவன சுரங்கங்களில் நடந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி திருட்டு தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த சட்டவிரோத சுரங்க தொழில் மூலம் சுமார் 20 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை ஹவாலா நெட்வொர்க் வழியாக ஐ-பேக் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, கடந்த 2ம் தேதியன்று நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆதாரங்கள் மற்றும் போலி இன்வாய்ஸ்கள் குறித்து விசாரணை நடத்த ஐ-பேக் அரசியல் ஆலோசனை நிறுவனத்தின் இணை நிறுவனரும், இயக்குநருமான வினேஷ் சந்தல் (44) என்பவரை காவலில் எடுக்க விசாரணை அமைப்புகள் திட்டமிட்டன.

முன்னதாக கடந்த ஜனவரியில் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலுவலகத்தில் சோதனை நடந்தபோது, ஆவணங்களை கைப்பற்ற விடாமல் முதல்வர் மம்தா பானர்ஜி தடுத்ததாக கூறப்படும் விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் நேற்று வினேஷ் சந்தலை அமலாக்கத்துறை போலீசார் கைது செய்தனர். வழக்கின் அவசரம் கருதி, நள்ளிரவே கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷெபாலி பர்னாலா டாண்டன் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இன்று அதிகாலை வரை நீடித்த இந்த விறுவிறுப்பான விசாரணையைத் தொடர்ந்து, வினேஷ் சந்தலை 10 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி வரும் 24ம் தேதி வரை அவர் போலீஸ் காவலில் இருப்பார்.

மேற்குவங்கத்தில் வரும் 23 மற்றும் 29ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்படும் ஐ-பேக் நிறுவன இயக்குநரின் இந்த கைது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அக்கட்சியின் அபிஷேக் பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : NEW DELHI ,VINESH CHANDAL ,CO ,FOUNDER ,POLITICAL CONSULTANCY I-PACK ,ENFORCEMENT DEPARTMENT ,Western State Eastern Collefields Company ,
× RELATED பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு