கிராவல் மண் எடுப்பு, கடத்தல் தீவிரம்

கோவை, பிப்.21: கோவை மாவட்டத்தில் செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால் மண்டபம், மயிலேரிபாளையம், நாச்சிபாளையம், பாலத்துறை, வழுக்குபாறை, பிச்சனூர், மதுக்கரை, எட்டிமடை, கந்தேகவுண்டன் சாவடி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதியில் முப்போக விளைச்சல் இருந்தது. குறிப்பாக தக்காளி, வெண்டை, அவரை, தட்டை, பச்சை பயிர், மாங்காய், தென்னை சாகுபடி அதிகமாக நடந்தது. மழையின்மை, கிணற்றில் வறட்சி, சொட்டு நீர் பாசன திட்டம் தோல்வி போன்றவற்றால் விவசாய பயிர் சாகுபடி பரப்பு குறைந்தது. வறட்சி பாதித்த விவசாய நிலங்களை ‘சைட்’ அமைத்து விற்பனை செய்யும் திட்டம் பயன்தரவில்லை. மனையிட விலை உச்சத்தை எட்டியதால் ரியல் எஸ்டேட் ெதாழிலும் முடங்கியது.

பொட்டால் காடாக, தரிசாக மாறிய பூமியில் கிராவல் மண் தோண்டி விற்பது பரவலாக அதிகமாகிவிட்டது. 10 முதல் 15 அடி ஆழம் வரை கிராவல் மண் தோண்டி எடுத்து விற்பனை செய்து வருகிறார்கள். மகசூல் செய்த மண்ணை விற்று பணம் பெற்று வாழ்க்கை நடத்தும் அவலத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் பாறை மண், கிணற்று மண் மட்டுமே கட்டிட பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. கிணறு, குவாரிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில் விவசாய பூமியை அழித்து மண் எடுக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. கிராவல் மண் தோண்டிய பூமியில் மீண்டும் விவசாயம் செய்ய முடியாது. மதுக்கரை வட்டாரத்தில் சுமார் ஆயிரம் 4 ஏக்கர் நிலத்தில் கிராவல் மண் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.

 விவசாய நிலங்கள் அழிப்பது பற்றி வேளாண், வருவாய்த்துறையினர் கவலைப்படவில்லை. மாறாக கிராவல் மண் வியாபாரத்தில் வருவாய், கனிம வளத்துறையினர் கணிசமான கமிஷன் பெற்று வருகிறார்கள். கிராவல் மண் எடுக்க கனிம வளத்துறையில் முறையான பர்மிட் பெற்று, உரிய நேரத்தில் வாகனங்களில் அனுமதி வழங்கப்படவேண்டும். ஆனால் 80 சதவீதம் பர்மிட் இன்றி கிராவல் மண் எடுப்பு பணி நடக்கிறது. சிலர் பர்மிட்டை முறைகேடாக பயன்படுத்தி கூடுதல் வாகனங்களில் கிராவல் மண் எடுத்து செல்வதாக தெரிகிறது. கிராவல் மண் எடுக்கும் பகுதி, ஒப்படைக்கும் பகுதிக்கான ரசீதில் குளறுபடி இருந்தாலும் கனிம வளத்துறையினர் கண்டுகொள்வதில்லை. ஒரு லோடு கிராவல் மண் 5000 ரூபாய் வரை விற்பனையாகிறது. விவசாய நிலங்கள் அழிப்பதையும், கிராவல் மண் கடத்தலையும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் காலம் கடத்துவதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

Related Stories: