செங்கம், ஏப்.12: செங்கம் அருகே ஆவணங்கள் இல்லாததால் காரில் வந்தவரிடம் இருந்து ரூ.2.50 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முன்னிட்டு கடந்த மார்ச் 15ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசு பொருட்கள், இதர பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை நடத்தி, ஆவணமில்லாதவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி செங்கம் தொகுதி நிலை கண்காணிப்பு குழுவினர், தண்டராம்பட்டு-தானிப்பாடி ரோடு கீழ்ராவந்தவாடியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, ரூ.2.50 லட்சம் இருந்தது தெரிய வந்தது. காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தண்டராம்பட்டு ஜெய்பீம் நகர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பதும், ஆவணம் இன்றி ரூ.2.50 லட்சம் எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தினர். மேற்கண்ட தகவலை உதவி தேர்தல் அலுவலர் முருகன் தெரிவித்தார். அப்போது துணை வட்டாட்சியர்கள் திருநாவுக்கரசு, வாலீஸ்வரன் உடனிருந்தனர்.
