செய்யாறு, ஏப். 14: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்குமேல் ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்கின்றனர். அதன்படி செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் குப்புசாமி நேற்று மாலை காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில், மேல்மா செக் போஸ்ட் அருகில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தவழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். இதில் வந்தவாசியில் இருந்து செங்கல்பட்டு நோக்கி பைக் வாங்க சென்றதாக தெரிவித்தனர். அவர்கள் வந்தவாசி டவுன் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அன்சாரி மகன் முகமதுயாசின் (21) தனது நண்பர்கள் இருவருடன் சென்றனர். அவர்கள் உரிய ஆவணமின்றி ரூ.66,200 வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து அதிகாரிகள், செய்யாறு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பிகா ஜெயினிடம் ஒப்படைத்தனர்.
