×

செண்பகத் தோப்பு அணையில் 150 கன அடி நீர் திறப்பு 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில்

கண்ணமங்கலம், ஏப். 14: கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் செண்பக தோப்பு அணையில் இருந்து 150 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் படவேடு செண்பகத் தோப்பு அணையில் இருந்து, பாசனப் பரப்பு பகுதிகளில் நிலவும் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அறிவழகன் கலந்து கொண்டு, அணையின் ஒரு மதகை திறந்து வைத்தார். தொடர்ந்து, அணையிலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர்கள் மற்றும் நவதானியங்களைத் தூவினர்.

தற்போது அணையிலிருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து இந்த நீர் திறப்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நீர் திறப்பின் மூலம் சந்தவாசல், ஆரணி, ஆற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள சுமார் 8,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதியைப் பெறவுள்ளன. கோடை காலம் தொடங்கி நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் சூழலில், சரியான நேரத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் மற்றும் இதர பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இது பயிர்களின் விளைச்சலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆரணி உதவி செயற்பொறியாளர் ராஜேஷ், போளூர் உதவி பொறியாளர் ராஜகணபதி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அப்பகுதி விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Chenbagathoppu dam ,Patavedu ,Kannamangalam ,Tiruvannamalai ,
× RELATED பதற்றமான 80 வாக்குச்சாவடிகளுக்கு 98 நுண்...