திருவண்ணாமலை, ஏப். 14: திருவண்ணாமலை மாவட்டத்தில், பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க, தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி முகாம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்த இப்பயிற்சி முகாமில், தேர்தல் பொது பார்வையாளர்கள் அபிஷேக்கிருஷ்ணா (செங்கம், கலசபாக்கம்), ரவிக்குமார்சர்பூர் (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்), சதேந்திரசிங் (போளூர், ஆரணி), ராமகிருஷ்ணாசித்தூரி (செய்யாறு, வந்தவாசி) ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2516 வாக்குச்சாவடிகளில், 80 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அவற்றை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள 96 தேர்தல் நுண் பார்வையாளர்கள், தங்களுக்கான பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், வாக்குச் சாவடியில் ஏற்படுத்த வேண்டிய குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை சரிபார்த்தல், மாதிரி வாக்கெடுப்பு நடைமுறைகள் பின்பற்றுதல், வாக்குச்சாவடி முகவர்கள் இருப்பதை உறுதி செய்தல் போன்ற பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) அன்பழகன், தேர்தல் பிரிவு தாசில்தார் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
