×

சட்டம் இயற்றுவதில் பெண்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

பனாஜி: பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். எனவே, கொள்கை உருவாக்கம் மற்றும் சட்டம் இயற்றுதலில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் (சிபிஏ) இந்திய பிராந்திய மேற்கு மண்டல மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது: வணிகம், கல்வி, அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். அதற்கேற்ப கொள்கை வகுப்பதிலும் சட்டம் இயற்றுவதிலும் அவர்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். இந்தியா ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறது. சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமாக அதிகரிக்க வேண்டிய நேரம் இது.

இந்திய அரசியலமைப்பு, நாட்டின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சரியான நேரத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பெண்கள் இட ஒதுக்கீட்டில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்ட தொடர் வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த சூழ்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Lok Sabha ,Speaker ,Om Birla ,Panaji ,Commonwealth Parliamentary Association ,CPA ,India Region Western Region… ,
× RELATED தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலை...