தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள காலத்தில் பறிமுதல் நகைகளை திரும்ப பெறுவது தொடர்பான விதிகளை வகுக்க வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நகைகளை கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்க கோரி பிரபல நகைக்கடை சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். உரிய ஆதாரங்களை காட்டி அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நகைகளை கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி பிரபல நகைக்கடை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நகைக்கடை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் 6 முறை தங்கள் நிறுவனத்தின் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஐந்து, ஆறு நாட்களுக்குப் பிறகுதான் அந்த நகைகள் மீண்டும் கிடைக்கின்றன. இதன் காரணமாக தங்களுக்கு வர்த்தக இழப்பு, நிதி இழப்பு ஏற்படுகிறது என்று வாதிட்டார்.

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், தற்போது பறிமுதல் செய்யப்படும் நகை, பணம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் ஒரே நாளில் அவை திருப்பி அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் இது சம்பந்தமாக விதிகள் வகுக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர். இதையடுத்து மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர்கள் தெரிவித்ததை ஏற்று வழக்கை திரும்ப பெற அனுமதித்த நீதிபதிகள், தேர்தலுக்குப் பிறகு இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு மனுதாரர் மனு அளிக்கலாம் என்றும் அதை தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Related Stories: