அதிகாலை இணையதளத்தில் வெளியானது: ஜனநாயகன் முழு படத்தையும் லீக் செய்த தவெகவினர்; தயாரிப்பாளர் அதிர்ச்சி; பரபரப்பு தகவல்கள்

சென்னை: ‘ஜனநாயகன்’ முழு படமும் ஆன்லைனில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை செய்தது தவெகவினர்தான் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காமல் போனதால் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் முழு படமும் ஆன்லைனில் நேற்று அதிகாலை வெளியாகிவிட்டது. ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யின் அறிமுக காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் தான் முதலில் கசிந்தது. அதன் பிறகு மொத்த படமுமே ஹெச்.டி. ப்ரிண்ட்டில் கசிந்துவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனநாயகன் பட லிங்க்கை பலரும் டவுன்லோடு செய்திருப்பதுடன் கேட்பவர்களுக்கு ஷேர் செய்கிறார்கள். இதனால் ஜனநாயகன் படத்தில் கஷ்டப்பட்டு வேலை பார்த்த அனைவருக்கும் தான் பாதிப்பு. எனவே, திருட்டு லிங்க்கை பார்த்தாலும் அதை டவுன்லோடு செய்யவோ, ஷேர் செய்யவோ வேண்டாம் என்று ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்ஷன் சார்பில் கோருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்களோ அதை தொடர்ந்து ஷேர் செய்து வருகிறார்கள். இதற்கு பின்னணியில் தவெகவினர்தான் உள்ளனர் எனக் கூறப்படுகிறது. அதாவது இணையத்தில் வெளியான ப்ரிண்ட்டில் எடிட் மார்க்கும் இருக்கிறது.

அந்த எடிட் மார்க் இருக்கும் வெர்ஷன் படத்தின் ஹீரோ, இயக்குனர், எடிட்டர், தயாரிப்பாளர் ஆகியோரிடம்தான் இருக்கும். அப்படி பார்க்கையில் இந்த நான்கு பேரின் தரப்பிலிருந்துதான் படம் லீக்காகியிருக்கும் என குரல்கள் கேட்கின்றன. அதுமட்டுமின்றி இதுவும் விஜய் தரப்பு அரசியல் ஸ்டண்ட்தான். இதை வைத்து அவர் தேர்தலில் அனுதாபம் தேட முயற்சிப்பதாகவும் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். தேர்தல் பிரசாரத்தை விஜய் தொடங்கியதிலிருந்து அவருக்கு பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. ஒரே விஷயத்தை அவர் திரும்ப திரும்ப பேசுவதும், பேப்பர் பார்த்து பார்த்து வசனங்கள் போல் ஒப்பிப்பதும் மக்களுக்கு பிடிக்கவில்லை.

கூட்டம் சேராததால், பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்து பஸ்களில் ஆட்களை அழைத்து வந்து குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.500ம் சாப்பாடும் கொடுத்து அழைத்து வந்து கூட்டத்தை காட்டுகிறார். சொந்த பிரச்னைகளும் அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் படமும் தேர்தலுக்கு பிறகு வந்தால் விஜய்யின் மவுசு குறைந்துவிடும் என்பதால் ஜனநாயகன் படத்தை தவெகவினரே கசியவிட்டுள்ளனர் என சினிமா உலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், இதனால் படத்தின் தயாரிப்பாளரான கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனர் வெங்கட் கே.நாராயணா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த படத்துக்காக அவர் ரூ.600 கோடி வரை செலவு செய்துள்ளார். தவெகவினர் படத்தை லீக் செய்திருப்பதால் அவர் கடும் விரக்தியில் உள்ளார். ‘‘விஜய் எப்போதுமே தனது சுயநலத்துக்காக எதையும் செய்வார். தேர்தல் நேரத்தில் இதுபோல் படத்தை கசியவிட்டு வேடிக்கை பார்க்கிறார். இதனால் படத்தில் உழைத்த ஏழை தொழிலாளர்களும் நமது நிறுவனமும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது’’ என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் குமுறுகிறார்கள்.

ஜனநாயகன் படம் வெளியானது குறித்து அறிந்த தயாரிப்பாளர் தனஞ்செயன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ‘‘ஜனநாயகன் பட காட்சிகள் ஆன்லைனில் கசிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். முழு படமும் லீக்காகிவிட்டதாக பலரும் டிவீட் செய்கிறார்கள். இதை யார் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது. கே.வி.என். புரொடக்ஷன்ஸ் உடனே நீதிமன்றத்தை அணுகி அந்த லிங்க்குகளை எல்லாம் நீக்கச் செய்ய வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார்.

ரஜினி அதிர்ச்சி: நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில், ‘‘இணையதளத்தில் ‘ஜன நாயகன்’ திரைப்படம் யாராலோ வெளியிடப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். இதை செய்தவர்களை அரசு கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இதுபோன்ற குற்றம் இனிமேலும் தொடரக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* முஸ்லிம்களை மீண்டும் தவறாக சித்தரிக்கும் விஜய்
‘துப்பாக்கி’ படத்தில் இந்திய முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டியிருந்தார் விஜய். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் படத்தின் இயக்குனர் முருகதாஸ் அப்போது மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்திலும் அதேபோல் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படத்தை பார்த்த ஒரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இந்த படத்துக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரிப்பதே விஜய்க்கு வேலையாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். படத்தில் இதுபோன்ற காட்சிகள் இருப்பதாலேயே முன்பே படத்தை ரிலீசுக்கு கொண்டு வந்தால் முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள் என தவெகவினர் பயந்துள்ளனர். இதனால்தான் சென்சார் கெடுபிடி செய்தபோது, மறுதணிக்கை செய்ய மும்பையிலுள்ள ரிவைசிங் கமிட்டிக்கு செல்லாமல், நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். அப்போதே மறுதணிக்கை செய்திருந்தால் படம் வெளியாகியிருக்கும் என சென்சார் போர்டு சொன்னது குறிப்பிடத்தக்கது.

Related Stories: