மகளிருக்காக இன்னும் நிறைய திட்டங்களை செய்வேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தி.மலை: திமுக, கூட்டணி கட்சிகளை சேர்ந்த 12 தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; ஆன்மீக அன்பர்களால் போற்றப்படும் ஊர் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலைக்கு வந்துள்ளேன். திருவண்ணாமலையில் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வருகிறேன். திருவண்ணாமலையையும் தீபத்தையும் பிரிக்க முடியுமா? என்னையும் தி.மலையையும் பிரிக்க முடியாது. திமுகவின் கோட்டை திருவண்ணாமலை.

திருவண்ணாமலை என்றால் திமுக மலை என்பது போல் இங்கு திமுக வலிமையாக உள்ளது. மலைகளும் அருவிகளும் நிறைந்த மாவட்டம் கள்ளக்குறிச்சி. திமுக ஆட்சியில்தான் திருவண்ணாமலை மாநகராட்சியானது; உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்கிறேன். திருவண்ணாமலையும் கள்ளக்குறிச்சியும் திராவிட மாடல் 2.0க்கு தயாரா? திமுக ஆட்சியில் 12 தொகுதிகளுக்கு செய்த சாதனைகளைச் சொல்ல நேரம் போதாது. திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைத்துள்ளோம்.

எடப்பாளையம் ஏரிக்கரையில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா அமைத்துள்ளோம். ஜவ்வாது மலைப் பகுதியில் புதிய சாலை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம், மாவட்டம் முழுவதும் 23 உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாள் கோரிக்கையான போளூர் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. செய்யாறு அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா, வெம்பாக்கத்தில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்துள்ளோம். கலசப்பாக்கத்தில் மினி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. திகைக்கின்ற அளவுக்கு சாதனைகளால் நிறைந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி. வேதனைகள் நிரம்பியதுதான் பழனிசாமியின் ஆட்சி; மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று திட்டமிட்டு பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். பழனிசாமியை பொறுத்தவரை அவர் ஒன்றும் செய்யவில்லை. நாம் செய்யும் நல்லதையும் பழனிசாமியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட மாடல் ஆட்சிக்கு வந்தபிறகு ஆண்டுதோறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படும்.

100 நாள் வேலை திட்ட பணி நாள்களையும் குறைத்துவிட்டனர். 100 வேலைவாய்ப்பு திட்டத்தில் இனி 200 நாள் வேலை கிடைக்கும் என்று பெரிய உருட்டாக உருட்டினார் விஞ்ஞானி பழனிசாமி; 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் தரவில்லை என வடமாநிலங்களிலேயே மக்கள் கொந்தளித்து போராடி வருகின்றனர். பாஜக அரசே வாபஸ் வாங்கிய 3 புதிய வேளாண் சட்டத்துக்கு முரட்டு முட்டுக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி; 2 மாதத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்குரிமைகளை பறிக்க வேண்டாம் என போராடினோம்.

தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது என்று எஸ்.ஐ.ஆருக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தார். ஏதாவது ஒரு விஷயத்தில் டெல்லி ஓனர் பக்கம் நிற்காமல் தமிழ்நாட்டு பக்கம் நின்றுள்ளீர்களா எடப்பாடி? தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக செய்யும் செயல்களை ரோஷம் வந்து கண்டித்துள்ளீர்களா பழனிசாமி?திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியதை கண்டித்து ஒரு வார்த்தை பேசினாரா? எம்.ஜி.ஆர். சிலை மீதே காவிச் சாயம் பூசும் அளவுக்கு வந்துவிட்டார்கள். எடபப்டி பழனிசாமிக்கு சுய மரியாதையும் கிடையாது, தமிழ் உணர்வும் கிடையாது.

பழனிசாமி செய்த துரோகங்களுக்கு பட்டிமன்றமே நடத்தலாம். சாதனைகளை சொல்ல முடியாததால் அவதூறு, பொய் பிரச்சாரங்களை அதிமுக – பாஜக கூட்டணி செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 4000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். ரூ.8,438 கோடி மதிப்புள்ள 8,107 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். திமுக அரசு இந்து விரோத அரசு என்று பாஜக கூறும் பொய்யை மக்கள் நம்ப மாட்டார்கள். ரூ.8,000 கூப்பன் எனும் இல்லத்தரசி திட்டத்தை சூப்பர் ஸ்டாராக தேர்தல் களத்தில் இறக்கியுள்ளேன். இந்தியாவுக்கே மாடலாக இருக்கிறது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை;

மகளிருக்காக இன்னும் நிறைய திட்டங்களை செய்வேன். ஸ்டாலின் அண்ணனுக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்கு வாக்கு செலுத்தப் போகிறோம் என்று பேசிக் கொள்கிறார்கள். திராவிட மாடல் அரசுக்கு இருக்கும் எழுச்சியை பார்த்து எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. டப்பா என்ஜின் ஆட்சிக்கு வந்தால் நாம் செய்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விடுவார்கள். நியாயமாக சுந்திரமாக தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளைக் கழகமாக மாறியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு அதிகாரிகளை இப்படித்தான் கூண்டோடு மாற்றினார்களா?

யாருக்கு உதவுவதற்காக அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றுகிறது? தேர்தல் ஆணையத்தின் நேர்மை கேள்விக்குறியாகி உள்ளது. பாஜகவின் தலையீட்டால் தமிழ்நாட்டின் உயரதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் திராவிட மாடல் அரசுதான் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இன்னும் ஒரு மாதத்தில் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையப்போகிறது. பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டுதான் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது என்று கூறினார்.

Related Stories: