அரியலூர், ஏப். 9: அரியலூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 9 கண்காணிப்பு குழுக்களும், 9 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாக்காளர்களுக்கு ஏதேனும் பணம் பட்டுவாடா செய்ய சட்ட விரோதமாக பணம் கொண்டு செல்லப்படுகிறதா, தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பழைய அரியலூர்-பெரம்பலூர் சாலையில் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அரசு மாவட்ட மருத்துவமனை அருகில் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர், அவ்வழியாக வந்த அமைச்சர் சா.சி.சிவசங்கரின் வாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
பறக்கும் படையினரின் சோதனைக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். சோதனையில் பணம் மற்றும் பரிசுப் பொருள் எதுவும் இல்லாததால் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் வாகனத்தை தொடர்ந்து செல்ல தேர்தல் பறக்கும் படையினர் அனுமதித்தனர்.
