வெனிசுலாவிலிருந்து 1 கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா நோக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியே போக்குவரத்துக்கு தடைப்பட்டதன் காரணமாக நம் நாட்டின் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், இந்தியா கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெனிசுலா நாட்டிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய உள்ளது. வெனிசுலாவிலிருந்து இந்த மாதம் 12 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்களில் கச்சா எண்ணெய் இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிப்ரவரி 2020-க்குப் பிறகு மிக அதிகமாக தற்போது கச்சா எண்ணெய் வெனிசுலாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது என்று அதிகாரிகள் தகவல் கூறி இருக்கிறர்கள். நம் நாடானது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 90%-ஐ இறக்குமதி செய்வதன் மூலமே பூர்த்தி செய்கிறது, நம் நாட்டிற்கு வரும் கச்சா எண்ணெயில் சுமார் 40% ஹோர்முஸ் ஜலசந்தி வழியே தான் வருகிறது. ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா போர் காரணமாக இந்த வழித்தடம் கிட்டத்தட்ட மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகளை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் தற்போது இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கும் வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதி சமீபத்திய போர் சூழலுக்கு முன்பே முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ப்ளூம்பெர்க் மேற்கோள் காட்டியுள்ள Kpler தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் இந்தியா 12.51 மில்லியன் பேரல்கள் வெனிசுலா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2020-க்குப் பிறகு, ஒரே மாதத்தில் வெனிசுலாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் அதிகபட்ச எண்ணெய் அளவு இதுவாகும்.வெனிசுலாவிலிருந்து நேரடியாகக் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அனுமதியைப் பெற்ற நாட்டின் முன்னணி தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries), வெனிசுலாவின் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான PDVSA-விடமிருந்து தனது முதல் சரக்கை ‘Helios’ என்ற மிகப் பெரிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்கனவே ஏற்றியுள்ளதாக ‘Bloomberg’ வெளியிட்டிருக்கும் தரவுகள் கூறுகின்றன.
இதனிடையே மத்திய கிழக்கில் ஏற்பட்ட பெரும் விநியோகத் தடையைத் தொடர்ந்து, டேங்கர் கப்பல்களில் ஏற்கனவே ஏற்றப்பட்ட ரஷ்யக் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா விதிவிலக்கு அளித்ததது. இதன் காரணமாக மார்ச் மாதத்தில் இந்தியாவின் ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதி பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 90 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
