×

ரெப்போ ரேட் மாற்றமின்றி 5.25%-ஆக தொடரும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு கடன் வழங்கும் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் ஏதுமின்றி 5.25%-ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்து உள்ளார். அதாவது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 5.25%-ஆகவே தொடரும். இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு (MPC), ஏப்ரல் 2026-க்கான தனது இருமாத நிதிக் கொள்கை அறிவிப்பில், ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதத்திலேயே மாற்றமின்றித் தொடர ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று அறிவித்தார்.

இந்த முடிவு சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க அமைந்துள்ளது. இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளதுடன், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை நிலைப்பாடு ‘நடுநிலை’ அதாவது நியூட்ரல் என்ற நிலையிலேயே தொடர்கிறது. 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனது முதல் பணவியல் கொள்கை அறிக்கையில் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தவிர STF விகிதம் 5% ஆகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.5% ஆகவும் நீடிப்பதாக சஞ்சய் மல்ஹோத்ரா அறிக்கையில் கூறி உள்ளார். வட்டி விகிதத்தை 5.25% ஆக மாற்றாமல் வைத்திருப்பது, பொருளாதாரத்தின் பல பிரிவுகளை சேர்ந்த கடன் வாங்கும் மக்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணமாக இருக்கும். ரிசர்வ் வங்கி தற்போதைய விகிதத்தை அப்படியே பராமரிப்பதால், ​​பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் விகிதங்கள் குறுகிய காலத்தில் அதிகரிக்க வாய்ப்பில்லை. இதனால் வீடுகள், வாகனங்கள், தனிப்பட்ட தேவைகள், பெருநிறுவன நிதி அல்லது சிறு வணிகங்கள் போன்ற கடன்களுக்கான EMI நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2026-ஆம் நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான 7.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2027-ஆம் நிதியாண்டில் 6.9% என்ற குறைந்த வளர்ச்சியே இருக்க கூடும் என MPC கணித்துள்ளது. முதல் காலாண்டிற்கான வளர்ச்சி கணிப்பு 6.8 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டிற்கு 6.7 சதவீதமாகவும், மூன்றாம் காலாண்டிற்கு 7 சதவீதமாகவும், நான்காம் காலாண்டிற்கு 7.2 சதவீதமாகவும் இருக்கும் என்று MPC தெரிவித்துள்ளது.

ரெப்போ ரேட் என்றால் என்ன?

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கியிடமிருந்து நாட்டில் இருக்கும் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். ரெப்போ ரேட் குறைக்கப்பட்டால், ரிசர்வ் வங்கியிடமிருந்து மலிவான வட்டி விகிதங்களில் வங்கிகள் கடன் வாங்கலாம். இதன் மூலம்வாடிக்கையாளர்களுக்கு மலிவான வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன்களை வழங்கும். ரெப்போ ரேட் குறைவாக இருப்பது என்பது வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனின் வட்டி விகிதமும் மற்றும் கடனின் EMI-யும் குறைவாக இருக்கும் என்பதாகும்.

Tags : Reserve Bank ,Governor ,Sanjay Malhotra ,
× RELATED ஈரானும் அமெரிக்காவும் சண்டை...