விருதுநகர், ஏப். 8: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகள் மார்ச் 30, ஏப்.2, 4, 6 ஆகிய நாட்களில் பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 250 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
ராஜபாளையம் தொகுதியில் மொத்தம் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நேற்று நடந்த பரிசீலனையில் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, அதிமுக கூட்டணி தமமுக வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்ட 25 கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாற்று வேட்பாளர்கள், ஒரே பெயரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் மனுக்கள் என 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. திருச்சுழி தொகுதியில் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம்தென்னரசு, அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் உள்ளிட்ட 26 வேட்பாளர்களின் மனுக்கள் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 4 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சாத்தூர் தொகுதியில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கனகராஜ் முன்னிலையில் நேற்று பரிசீலனை நடந்தது. அதில் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ், பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சிவகாசி தொகுதியில் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று நடந்த பரிசீலனையில் 9 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் அசோகன், அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உட்பட 27 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வில்லிபுத்தூர் தொகுதியில் 26 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகாலிங்கம், அதிமுக வேட்பாளர் சந்திரபிரபா முத்தையா உள்பட 14 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என தேர்தல் அதிகாரி ரமேஷ் தெரிவித்தார். அருப்புக்கோட்டை தொகுதியில் 43 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் திமுக வேட்பாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அதிமுக வேட்பாளர் சேதுபதி உள்ளிட்ட 26 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. விருதுநகர் தொகுதியில் 29 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், அதிமுக வேட்பாளர் கணேசன் உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
