மதுரை, ஏப். 8: கோடை வெயிலின் தாக்கத்தால் உடலில் அதிகரிக்கும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, இளநீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். கோடை காலம் துவங்கிய நிலையில், தற்போது பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்த துவங்கி உள்ளது. இருப்பினும் மனிதர்களின் உடல் வெப்பத்தால் உஷ்ணமடைந்து, பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. கோடையின் சூட்டை தணிக்க மக்கள் குளிர்பானங்கள் மற்றும் சர்பத் போன்றவற்றை அதிகளவு உட்கொள்கின்றனர். இது மேலும் உடலை நோய்வாய்ப்படுத்துகிறது. ஏசி அறையில் இருந்தாலும் உடல் உஷ்ணமடையும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என பல மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘இளநீர் உடல் சூட்டை தணிப்பதற்கு ஏற்றதாகும். இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்புச்சத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை உள்ளன. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இளநீர் சரியான தேர்வாகும். இளநீரில் உள்ள பொட்டாசியம், எலக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்கி வயிற்றுபோக்கினை சரிசெய்ய உதவுகிறது. இதில் உள்ள எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. உடல் உஷ்ணத்தையும் வெகுவாக குறைக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
கோடைக்கு ஏற்ற சத்தான பானமாக கருதப்படும் இளநீர், வாதத்தை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக கற்கள் உருவாவதைக் கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. ரத்தசோகை, உற்சாகமின்மைக்கு நிவாரணம் அளிப்பதுடன், ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருமல் நோய்க்கு மருந்தாக பயன்படுவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது’ என்றனர்.
