சோழவந்தான், ஏப். 8: சோழவந்தான் வடக்கு ரத வீதியில் சேதுராமன் என்பவருக்கு சொந்தமான, கூரையுடன் கூடிய சிறிய குடோன் இருந்து வந்தது. இதில் பெயின்ட் டப்பாக்கள், பிளாஸ்டிக் பைப்புகள், மரச்சாமான்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த குடோனில் நேற்றுதிடீரென தீப்பிடித்தது. பெயின்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததால், தீயின் தாக்கம் வெகு வேகமாக பரவி மளமளவென பற்றி எரியத்தொடங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக நிலைய அலுவலர்கள் முத்துக்குமரன், நாகராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து நீண்ட நேர போட்டத்திற்கு பிறகு தீயை முழுமையாக அணைத்தனர். பிரதான சாலையில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ள பகுதியில் நடந்த இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
