சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். பதற்றமானவை என அடையாளம் காணப்பட்ட 5,938 வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெப்பத்தை தணிக்க வாக்குச் சாவடி மையங்களில் பந்தல், இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 12ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. தேர்தல் களம் அனல் பறக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
“தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 462 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். 85வயதிற்கு மேற்பட்ட 2.5 லட்சம் பேர் தபால் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.
ஏப்ரல் 13ம் தேதிக்குள் துணை ராணுவப் படையினர் தமிழகம் வருவார்கள். தமிழகத்தில் 5,938 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், 3,302 பதற்றம் நிறைந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் செலவு ரூ.795 கோடி; 2004 பார்லிமென்ட் தேர்தல் செலவு ரூ.1,009 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரு.1,302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
