ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது சிறு தூறல் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சாயல்குடி அருகே உள்ள கூரான்கோட்டை கிராமத்தில் காற்றுடன் கூடிய மழைக்கு மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. அப்போது அருகில் இருந்த பாண்டி என்பவரின் வீட்டின் மீது விழுந்ததில் ஆஸ்பெட்டாஸ் சேதமடைந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சாயல்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அதேபோன்று, கடலாடி-முதுகுளத்தூர் சாலையில், தேவர் குறிச்சி பகுதியில் இருந்த பழமையான மரம் ஒன்று, காற்றிற்கு சாய்ந்து விழுந்ததில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பத்தினை சீரமைத்தனர். மழையால் மாவட்டத்தில் கோடை விவசாயம் செய்துள்ள பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தொண்டி: தொண்டி, நம்புதாளை, திருவாடானை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று அதிகாலை சிறு தூரலுடன் பலத்த காற்று வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. திருவாடானை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தினையத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் இருந்த பல மின்கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது.
இதனால் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனை சீரமைக்கும் பணிகளில் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

