*வேட்பாளர் பெயர் பதிவேற்றும் பணிகளை கலெக்டர் ஆய்வு
பாலக்காடு : பாலக்காடு இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பதிவேற்றும் பணிகளை மாவட்ட கலெக்டர் எம்.எஸ்.மாதவிக்குட்டி நேரில் ஆய்வு செய்தார்.சட்டமன்ற தேர்தலையொட்டி பாலக்காடு மாவட்டத்தில் திருத்தாலா தொகுதியில் 219 வாக்குச்சாவடிகளும், பட்டாம்பி தொகுதியில் 224 வாக்குச்சாவடிகளும், ஷொர்ணூர் தொகுதியில் 225 வாக்குச்சாவடிகளும், ஒத்தப்பாலம் தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளும், கோங்காடு தொகுதியில் 193 வாக்குச்சாவடிகளும், மன்னார்க்காடு தொகுதியில் 221 வாக்குச்சாவடிகளும், மலம்புழா தொகுதியில் 246 வாக்குச்சாவடிகளும், பாலக்காடு மாவட்டத்தில் 219 வாக்குச்சாவடிகளும், தரூர் தொகுதியில் 177 வாக்குச்சாவடிகளும், சித்தூர் தொகுதியில் 193 வாக்குச்சாவடிகளும், நெம்மாரா தொகுதியில் 207 வாக்குச்சாவடிகளும், ஆலத்தூர் தொகுதியில் 174 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 536 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாலக்காடு அகத்தேத்தரா என்எஸ்எஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இங்கு கோங்காடு, மன்னார்க்காடு, மலம்புழா மற்றும் பாலக்காடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அவைகளில் வேட்பாளர்கள் பெயர்கள், சின்னங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த பணிகளை பாலக்காடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான எம்.எஸ். மாதவிக்குட்டி நேரில் ஆய்வு செய்தார்.

