×

நீதித்துறையில் ஊழல் பாடத்தை பாடபுத்தகத்தில் சேர்த்த என்சிஇஆர்டி குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தங்கள் தரப்பு நியாயத்தை கேட்கவேண்டும் என்று கோரிக்கை

 

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பாடத் திட்டங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி தயாரித்து வருகிறது. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற பாடத்தில் சில தலைப்புகளை புதிதாக என்.சி.இ.ஆர்.டி அண்மையில் இணைத்தது. அதில்,” நீதித்துறை கட்டமைப்பைத் தாண்டி, நீதித்துறை ஊழல் மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டு இருந்தது. இது நீதித்துறையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக என்.சி.ஆர்.டி நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கேட்டது. மேலும் மேற்கண்ட பாடத்தில் இந்த அத்தியாயத்தைத் தயாரித்த பாடப்புத்தக மேம்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் மைக்கேல் டானினோ, கல்வி நிபுணர் சுபர்ணா திவாகர் மற்றும் சட்ட ஆய்வாளர் அலோக் பிரசன்னா குமார் ஆகிய மூவரையும் கடந்த மாதம் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் ”கருப்புப் பட்டியலில்” சேர்த்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மேம்பாட்டு குழுவில் இடம்பெற்று இருந்த மேற்கண்ட மூன்று நிபுணர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில்,” இந்த அத்தியாயம் என்பது ஒரு தனிநபரால் எழுதப்பட்டது கிடையாது. கூட்டு முடிவின் அடிப்படையில் உருவானது. தங்களுக்கு விளக்கமளிக்க வாய்ப்பு அளிக்காமலேயே இத்தகைய கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் தரப்பு நியாயத்தை தெரிவிக்கும் வகையில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

 

Tags : NCERT ,Supreme Court ,New Delhi ,National Institute of Educational Research ,CBSE ,
× RELATED சுங்கச்சாவடிகளில் புதிய டிஜிட்டல் விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்கள்!