×

பரிசு விழவில்லை என்று கருதி குப்பைத்தொட்டியில் வீசிய லாட்டரிக்கு ரூ. 1 கோடி: மூதாட்டிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

 

திருவனந்தபுரம்: பரிசு விழவில்லை என்று கருதி குப்பைத்தொட்டியில் வீசிய லாட்டரிக்கு ரூ. 1 கோடி கிடைத்தது. கேரளாவை சேர்ந்த ஒரு மூதாட்டிக்கு இந்த அதிர்ஷ்டம் வந்துள்ளது. கேரள மாநிலம் எடத்துவா அருகே உள்ள தலவடி பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சச்சாமா (73). கடந்த சில வருடங்களுக்கு முன் கணவனை இழந்த இவர் அப்பகுதியில் ஒரு சிறிய பேக்கரி நடத்தி வருகிறார். தினமும் கேரளம் அரசின் லாட்டரி எடுப்பது குஞ்சச்சாமாவின் வழக்கமாகும். 1000, 5000 என சிறிய, சிறிய பரிசுகளும் இவருக்கு கிடைத்து வந்தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குஞ்சச்சாமா காருண்யா பிளஸ் லாட்டரி டிக்கெட் வாங்கினார். இதன் முதல் பரிசு ரூ. 1 கோடி ஆகும். நேற்று முன்தினம் இந்த லாட்டரிக்கான குலுக்கல் நடந்தது. எப்போதுமே தனக்கு முதல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கருதுவது குஞ்சச்சாமாவின் வழக்கமாகும். இதனால் கடைசிப் பரிசுகள் விழுந்திருக்கிறதா என்பதை மட்டும் தான் இவர் பார்ப்பார். இதேபோலத் தான் நேற்று முன்தினமும் இவர் வழக்கம் போல கடைசிப் பரிசிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை பார்த்தார்.

அந்தப் பரிசுகள் எதுவும் கிடைக்காததால் விரக்தியுடன் குஞ்சச்சாமா டிக்கெட்டை தூக்கி குப்பைத் தொட்டியில் வீசினார். மாலையில் இவரைப் பார்க்க வந்த இவரது தம்பி பாபு, வழக்கமாக டிக்கெட் வாங்கும் கடையில் தான் முதல் பரிசுக்கான டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது என்றும், குஞ்சச்சாமா வாங்கிய டிக்கெட்டுக்கு பரிசு விழுந்திருக்கிறதா என்று பார்க்குமாறும் கூறியுள்ளார். அப்போதுதான் அவருக்கு லேசாக பொறி தட்டியது. உடனடியாக குப்பைத் தொட்டியில் இருந்து அந்த டிக்கெட்டை தேடிப்பிடித்து எடுத்து பார்த்தபோது அதற்குத் தான் முதல் பரிசு ரூ. 1 கோடி கிடைத்திருந்தது. தன்னுடைய தம்பி வந்து சொல்லியிருக்காவிட்டால் ரூ.1 கோடி வீணாகப் போயிருக்கும் என்று கூறிய குஞ்சச்சாமா பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை அருகிலுள்ள வங்கியில் முதலீடு செய்தார்.

 

Tags : Thiruvananthapuram ,Kerala ,Kunjachama ,Thalavadi ,Edathuva ,Kerala.… ,
× RELATED சுங்கச்சாவடிகளில் புதிய டிஜிட்டல் விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்கள்!