×

30 மாதங்களுக்கு பின் விழித்து கொண்ட பிரதமர் மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்தத்தை தேர்தலுக்காக பாஜ பயன்படுத்துகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

புதுடெல்லி: “மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டத்தை தேர்தலுக்கான பாஜ பயன்படுத்துகிறது” என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் தள பதிவில், “கடந்த 2023 செப்டம்பரில் நாரி சக்தி வந்தான் ஆதினியம் 2023, நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதை 2024 மக்களவை தேர்தலில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால், அப்போது மோடி அரசாங்கம் எல்லை நிர்ணயம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்ற நிபந்தனையை கொண்டு வந்தது. இது சட்டப்பிரிவு 334-ஏ ஆகும். அது அப்போது சேர்க்கப்பட்டது.

ஆனால், 30 மாதங்களுக்கு பிறகு விழித்து கொண்ட மோடி, தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், பேரவை தேர்தல் நடைபெறும் 4 மாநிலம், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள வாக்காளர்களை பாதிக்கும் விதமாக எல்லை நிர்ணயம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்தேவையை நீக்குவதற்காக 334-ஏ சட்டத்தை திருத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தை தற்போது தேர்தல் பிரச்னையாக மோடி பயன்படுத்துகிறார். 4 மாநில, ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்கள் மோடிக்கு உரிய பதிலை கொடுப்பார்கள், பாஜவை உறுதியாக நிராகரிப்பார்கள்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

 

Tags : BJP ,Congress ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,Nari Shakti Vandan Aadiniyam ,
× RELATED சுங்கச்சாவடிகளில் புதிய டிஜிட்டல் விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்கள்!