×

3 பாஸ்போர்ட் வைத்திருப்பதாக புகார் இது பாகிஸ்தான் சதி…மனைவி மீதான புகாரில் அசாம் முதல்வர் விளக்கம்

 

கவுகாத்தி: 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அங்கு இன்றுடன் பிரசாரம் ஓய்வு பெற உள்ள நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மனைவி ரினிகி புயன் சர்மா மீதான புகார் அரசியல் களத்தையே மாற்றிப்போட்டுள்ளது. அவரது மனைவி ஐக்கிய அரபு அமீரகம், ஆன்டிகுவா, எகிப்து ஆகிய 3 நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்துள்ளதாகவும், துபாய், அமெரிக்காவில் சொத்து உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கு நேற்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்து கூறியதாவது: எனது மனைவி பல பாஸ்போர்ட்களை வைத்திருப்பதாகவும், துபாயில் சொத்து வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ள குற்றச்சாட்டுகள், ஒரு பாகிஸ்தானிய சமூக ஊடகக் குழுவிடமிருந்து பெறப்பட்ட பொய்த் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அசாம் தேர்தல் முடிவுகளைப் பாதிக்க பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் நோக்கிலேயே இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

என் மனைவி மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த காங்கிரஸ் பயன்படுத்திய ஆவணங்கள், அஜ்மானில் உள்ள பாகிஸ்தானியர்கள்(Pakistanis in Ajman ) என்ற சமூக ஊடகக் குழுவிலிருந்து பெறப்பட்டவை. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரின் தொலைந்துபோன கடவுச்சீட்டில் என் மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து பயன்படுத்தியுள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படை அற்றவை; இவை போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதோடு, அசாம் தேர்தல் சூழலைக் கெடுக்கும் தீய நோக்கத்துடனும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு சாதாரண மோசடி வழக்கு அல்ல; மாறாக, தேசத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும். இதில் பாகிஸ்தானின் தலையீடு தெளிவாகத் தெரிகிறது. சட்ட அமலாக்க முகமைகள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளும்போது இக்கோணத்தையும் கருத்தில் கொள்வார்கள்.

அசாமின் முன்னாள் முதல்வரான தருண் கோகாயின் மகனான கவுரவ் கோகாய் இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு இறங்கி, என் மனைவி மீது இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சர்வதேச பரிவர்த்தனை வசதியுள்ள கிரெடிட் கார்டு வைத்திருக்கும் எவரும், ஒரு இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்ய முடியும். நாங்கள் கவுரவ் கோகாய் மற்றும் அவரது மனைவியின் பெயரிலும் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம்; ஆனால் அது ஒரு போலியான நிறுவனமாகும். நாங்கள் 199 அமெரிக்க டாலர்களைச் செலுத்தி ‘GauravElizabeth786 Limited Liability LLC’ என்ற நிறுவனத்தை உருவாக்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Pakistan… ,Assam ,Chief Minister ,Guwahati ,Assam Legislative Assembly ,Himanta Biswa Sarma ,Riniki Phuyan Sharma… ,
× RELATED சுங்கச்சாவடிகளில் புதிய டிஜிட்டல் விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்கள்!