×

சட்டீஸ்கரில் 2003ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு மறைந்த முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகிக்கு ஆயுள் தண்டனை: சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் உத்தரவு

 

ராய்பூர்: சட்டீஸ்கரில் 23 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகிக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டீஸ்கரில் கடந்த 2003ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பொறுப்பு வகித்து வந்த ராம் அவதார் ஜக்கி பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்டார். அரசியல் தொடர்புடைய இந்த வழக்கில் சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் மறைந்த அஜித் ஜோகியின் மகனும், முன்னாள் எம்எல்ஏவுமான அமித் ஜோகி உள்பட 31 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 28 பேருக்கு தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகியை விடுதலை செய்தது.

இதையடுத்து, அமித் ஜோகிக்கு எதிராக 1,100 பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. மேலும், அமித் ஜோகியின் விடுதலையை எதிர்த்து ராம் அவதாரின் மகன் சதிஷ் ஜக்கி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் முதலில், அமித் ஜோகிக்கு ஆதரவாக தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த வழக்கை மீண்டும் பரிசீலிக்குமாறு சட்டீஸ்கர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து அந்த வழக்கை கடந்த 2ம் தேதி விசாரித்த சட்டீஸ்கர் நீதிமன்றம் ராம் அவதார் ஜக்கி கொலை வழக்கில் அமித் ஜோகி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. 3 வாரங்களுக்குள் அமித் ஜோகி சரணடைய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அமித் ஜோகிக்கு ஆயுள் தண்டனை விதித்து சட்டீஸ்கர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

 

Tags : Chhattisgarh High Court ,Amit Jogi ,Chief Minister ,Ajit Jogi ,Raipur ,High ,Court ,Chhattisgarh ,Nationalist Congress Party ,
× RELATED சுங்கச்சாவடிகளில் புதிய டிஜிட்டல் விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்கள்!