புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் கடந்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது, அங்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சட்டப்பேரவையின் 2வது கேட்டை நோக்கி ஒரு மர்ம கார் ஒன்று நேற்று மதியம் 2 மணியளவில் வந்தது. அங்கு, போதிய அளவு பாதுகாப்பு இல்லாததால் இரும்பு கேட்டை உடைத்துகொண்டு கார் வேகமாக உள்ளே சென்றது. அதில், இருந்து இறங்கிய மர்ம நபர் முக கவசம் அணிந்து கொண்டு அங்கு நின்றிருந்த சபாநாயகரின் அதிகாரப்பூர்வ கார் முன் ஒரு பூந்தொட்டியையும் ஒரு மாலையும் வைத்துவிட்டு வந்த காரில் தப்பி சென்றுவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை வளாகத்தில் அதிகளவு பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் கார் உள்ளே நுழைந்தது எப்படி என்ற கேள்வி பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. சம்பவம் குறித்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி, மாலையை சோதனை செய்தனர். அதில், எந்த ஒரு மர்ம பொருளும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அத்துமீறி நுழைந்த கார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். நடத்தப்பட்ட தொடர் விசாரணையையடுத்து சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், சட்டப்பேரவைக்குள் நுழைந்த காரை வடக்கு டெல்லியில் வைத்து போலீஸ் பறிமுதல் செய்தது. இந்தச் சம்பவம் வெறும் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் நிகழ்ந்துவிட்டது. இது பெரும் பாதுகாப்பு பிரச்னையை எழுப்பி உள்ளது. கார் உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் பகுதியை சேர்ந்த பதிவு எண் கொண்டது என தெரியவந்துள்ளது.
