கல்வியறிவற்ற குஜராத்திகளை போல் கேரள மக்களை ஏமாற்ற முடியாது: கார்கேவின் பேச்சால் சர்ச்சை

இடுக்கி:கேரள சட்டசபை தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், குஜராத் மக்கள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில சட்டசபை தேர்தல் வருகிற 9ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

இந்த நிலையில், நேற்று இடுக்கியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ‘கேரள மக்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது. அவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் கல்வி அறிவு மிக்கவர்கள். மோடி அவர்களே, குஜராத்தில் இருக்கும் கல்வியறிவற்றவர்களையும் அல்லது மற்ற இடங்களில் உள்ளவர்களையும் உங்களால் ஏமாற்ற முடியும். ஆனால், கேரள மக்களை உங்களால் ஒருபோதும் ஏமாற்ற முடியாது’ என்று கூறினார்.

மேலும், பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் ரகசியமாக நீண்டகால திட்டம் போட்டு காங்கிரசை ஆட்சியில் அமர விடாமல் தடுக்க முயற்சிப்பதாகவும் கார்கே அந்த கூட்டத்தில் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்கேவின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் அவமானப்படுத்தும் செயல் என்றும், காங்கிரஸ் கட்சி மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்வதாகவும் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: