நிதிஷ் குமார் 10ம் தேதி எம்பியாக பதவியேற்பு; பீகார் முதல்வர் பதவிக்கு பாஜகவில் 3 பேர் போட்டி: 13ம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம் நடப்பதால் பரபரப்பு

புதுடெல்லி: பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்க உள்ளதால் மாநில அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பீகாரில் நீண்டகாலம் முதல்வராகப் பணியாற்றி சாதனைப் படைத்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் (75), கடந்த மார்ச் 16ம் தேதி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தனது பீகார் சட்ட மேலவை உறுப்பினர் பதவியை கடந்த மார்ச் 30ம் தேதி ராஜினாமா செய்தார்.

இதற்கு முன்னதாக அவர் பீகார் சட்டப்பேரவை, சட்ட மேலவை மற்றும் மக்களவை ஆகியவற்றில் பணியாற்றிய நிலையில், தற்போது மாநிலங்களவைக்கும் செல்வதன் மூலம் நாட்டின் நான்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற அவைகளிலும் உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையை பெறுகிறார். இதுகுறித்து பீகார் பாஜக தலைவர் சஞ்சய் சராவகி கூறுகையில், ‘நிதிஷ்குமார் வருகிற 10ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்க உள்ளார். வரும் ஏப். 8ம் தேதி (நாளை மறுநாள்) பாட்னாவில் இறுதி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த உள்ளார். டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு, வரும் 12 அல்லது 13ம் தேதியில் அவர் தனது முதல்வர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்வார். அவர் தேசிய அரசியலுக்குச் சென்றாலும், பீகாரில் அமையவுள்ள புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கான நீண்டகாலத் திட்ட ஆலோசகராகத் தொடர்ந்து நீடிப்பார்’ என்று தெரிவித்தார்.

நிதிஷ்குமார் ராஜினாமா செய்த பிறகு, வரும் 13ம் தேதி பாட்னாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பீகாரின் அடுத்த முதல்வர் குறித்து முடிவு எடுக்கப்படும். பீகார் மாநில வரலாற்றில் முதல்முறையாக பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. நித்யானந்த் ராய், சாம்ராட் சவுத்ரி அல்லது திலீப் குமார் ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவர் புதிய முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நிதிஷ்குமாருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை மாநில அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இச்சம்பவம் பீகார் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: